போராடும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழில் பகிர்ந்த பிரதமர் மோடி

போராடும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழில் பகிர்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதிய கடிதத்தின் தமிழ் பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் தமிழாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்செய்து பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ‘புதிய சீர்திருத்தங்களின் பயன்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் எப்படி அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதே சமயத்தில் மறுபுறத்தில் இந்தச் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் மாயையை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ள சந்தேகங்களை நீக்கும் வகையில் அவர்களிடம் உள்ள குழப்பங்களை நீக்க வேண்டியது, நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாக உள்ளது.

  புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்ச ஆதார விலைகளின் அடிப்படையில் அரசு செய்திருக்கும் கொள்முதல்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை அளவாக அதிகரித்துள்ளன என்பதில் வேளாண்மைத் துறை அமைச்சர் என்ற வகையில், நான் திருப்தி அடைந்திருக்கிறேன். குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதில் அரசு புதிய சாதனை படைத்திருக்கும் சமயத்தில், கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி) நடைமுறை கைவிடப்படும் என்று விவசாயிகளிடம் சிலர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயத்துக்கு தூண்டப்பட்டு, சிலர் பரப்பிவிடும் இத்தகைய அப்பட்டமான பொய்களை விவசாயிகள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். உற்பத்திச் செலவைக் காட்டிலும் 1.5 மடங்கு அளவுக்கு எம்.எஸ்.பி விலையை அரசு உயர்த்தியுள்ளது.

  சட்டங்கள் குறித்த உண்மைத் தகவல்:

  எம்.எஸ்.பி நடைமுறை இன்னும் தொடர்கிறது. மேலும் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை.

  பயிர்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. நிலத்தின் அனுபவ உரிமையை மாற்றித் தருதல், விற்பனை, குத்தகை அல்லது அடமானம் போன்ற எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது.

  எந்தச் சூழ்நிலையிலும், விவசாயிகளின் நிலம் முழு பாதுகாப்புடன் இருக்கும்.

  விளைபொருளுக்கான கொள்முதல் விலை, வேளாண்மை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

  நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் விவசாயிக்குப் பணம் தரப்பட வேண்டும். அப்படித் தரத் தவறுபவர்கள் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டும். அபராதம் விதிக்கப்படும்.

  பல மாநிலங்கள் ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி அளித்துள்ள. ஒப்பந்த வேளாண்மை குறித்து பல மாநிலங்களில் சட்டங்களும் உள்ளன.

  குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் மற்றும் நில உரிமை தொடர்பான அனைத்து சந்தேகங்களையும், குழப்பங்களையும் தெளிவுபடுத்த அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்துவருகிறது. நாங்கள் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் பேச்சு நடத்திவருகிறோம். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

  ஆனால், விவசாயிகள் என்ற போர்வையில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் உருவாக்கியுள்ள குழப்பமான சூழ்நிலையையும் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியமானதாக உள்ளது. புரளிகள் மீது கவனம் செலுத்தாமல், எல்லா விஷயங்களையும் உண்மைகளின் அடிப்படையில் மறு சிந்தனை செய்து மதிப்பீடு செய்யவேண்டும் என்று இந்தக் கடிதத்தின் மூலம் உங்களை நான் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

  விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்:

  குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க அரசு தயாராக உள்ளது.

  வேளாண் விளைபொருள் சந்தைக்குழுக்களுக்கு வெளியில் செயல்படும் தனியார் சந்தைக்கு வரி வசூலிக்க மாநிலங்கள் அனுமதிக்கப்படும்.

  எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் நீதிமன்றத்தை நாட விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்

  வேளாண்மை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்படும்.

  யாரும் சட்டவிரோதமாக நிலத்தைக் கையகப்படுத்த முடியாது. ஏனெனில், விவசாய நிலப் பயன்பாட்டு உரிமையில் மாற்றம், விற்பனை, குத்தகைகள் மற்றும் அடமானம் வைக்கும் எந்த அம்சமும் இந்தச் சட்டத்தில் இல்லை.

  விவசாயிகளின் நிலத்தில் நிரந்தரமான எந்த மாற்றத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்ய முடியாது.

  விவசாயிகளின் நிலத்தில் தற்காலிககக் கட்டுமானம் எதுவும் மேற்கொள்ள ஒப்பந்ததாருக்கு கடன் தரப்படாது.

  எந்தச் சூழ்நிலையிலும், விவசாயிகளின் நிலத்தைப் பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்காது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: