பிரதமர் மோடிக்கு கொரோனா வைரஸ் பற்றி புரியவில்லை: ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனாவைப் பற்றி தெரியவில்லை, கோவிட் பற்றி அவருக்குப் புரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

  • Share this:
    “பிரதமர் மோடிதான் கொரோனா 2வது அலை பரவக் காரணம். அவர் கோவிட்டைப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவில் கொரோனா மரண விகிதம் பொய், அரசு உண்மையைக் கூற வேண்டும்.

    அரசு தான் பணியாற்றும் வழிமுறைகளை மாற்ற வேண்டும். பொய்யும் புரட்டும் பிரச்சாரமும் வேலைக்கு ஆகாது. மரணங்கள் எண்ணிக்கையில் பொய் தாண்டவமாடுகிறது. இது அரசியல் அல்ல, மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியது.

    நானும் மற்றவர்களும் கோவிட் இரண்டாம் அலை பற்றி எச்சரித்தோம். ஆனால் தொடர்ந்து எங்களை கிண்டலும் கேலியும் செய்தனரே தவிர காது கொடுக்கவில்லை. பிரச்னை என்னவெனில் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் கோவிட் பற்றி புரியவில்லை என்றே நான் கருதுகிறேன்.

    அது வெறும் நோயல்ல, அது பரிணாமம் அடையும் ஒரு நோய் தொற்று. அதற்கு அதிக நேரம் கொடுத்தால் அது அபாயகரமானதாக மாறிவிடும்.

    மக்கள் தொகையில் 3% மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். வைரஸுக்கான கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். வாக்சினை வைத்து நல்ல பிசினஸ் பண்ணுகிறார்கள். வாக்சின்களுக்கு பலதரப்பட்ட விலைகள் நிர்ணயிக்கின்றனர்.

    வாக்சின் போடப்படும் வேகத்தைப் பார்த்தால் நாம் 2024 வரை வாக்சின் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், வேகம் காட்ட வேண்டும் இல்லையெனில் அலை மேல் அலையாக நாம் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

    அரசின் வேலை புள்ளி விவரங்களை அமுக்குவதாக இருந்து வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ் விவகாரமாகும், மரண விகிதத்தில் பொய் கூறுவது, பத்திரிகைகள் உண்மையைக் கூறாமல் பார்த்துக் கொள்வது, ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு நெருக்கடி கொடுப்பது இதைத்தான் செய்து வருகின்றனர்.

    எண்ணிக்கை பொய் கூறாது, ஆனால் அரசு பொய் கூறுகிறது” இவ்வாறு கூறியுள்ளார் ராகுல் காந்தி.
    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாகக் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை கடந்த 44 நாட்களுக்குப் பிறகு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 1.86 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியுள்ளது.

    பலி எண்ணிக்கையும் 4,000த்திற்கும் கீழ் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,660 பேர் மரணித்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3,18,895 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 21,273 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை ஒரேநாளில் 884 ஆக இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உ.பி. ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    Published by:Muthukumar
    First published: