பீகாரில் வளர்ச்சியே வென்றிருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக மாறிவருவதாகவும் தெரிவித்தார்.
பீகார் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அத்துடன், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உட்பட 11 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில், 8 இடங்களில் வெற்றிபெற வேண்டி நிலை பாஜக-வுக்கு இருந்தது. ஆனால், 19 தொகுதிகளில் வாகை சூடி, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று, தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் வளர்ச்சியே வெற்றிபெற்றிருப்பதாகவும், சிறப்பான ஆட்சி முறையால் பாஜக கூட்டணி வென்றுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பாஜக தற்போது இருப்பதாகவும் மோடி கூறினார்.
மேலும் பீகாரில் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்துள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற பீஹார் மக்களுக்கும் நிதிஷ்குமாருக்கும் எனது வாழ்த்துக்கள். பா.ஜ. வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பரவியுள்ள இந்நேரத்தில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது சவாலான ஒன்றும் பிரதமர் மோடி கூறினார்.