தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான காமராஜரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த காமராஜர், காந்தியின் தொண்டராக இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டார். 1946ஆம் ஆண்டில் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவரான கமாராஜர், 1954ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சரானர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பின்னர் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இரு பிரதமர்களை உருவாக்கியதற்காக கிங் மேக்கர் என்றும் அழைக்கப்பட்டவர்.
தமிழ்நாட்டில் ஏழை எளியோர் என அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கில் அரசுப் பள்ளிகளை தொடங்கிய காமராஜர், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க இலவச மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.இவரின் மறைவுக்குப் பின் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது 1976ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கல்வி கண் திறந்த கர்மவீரர் என பலராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்த நாளான இன்று, நாட்டின் பல்வேறு தலைவரும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் காமராஜருக்கு தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
நாடாளுமன்ற அவைகளில் இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது - புதிய பட்டியல் வெளியீடு
முன்னதாக, தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்,'மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன். இதற்காக, தமிழ்நாடு பாஜக சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.