இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்!

பிரதமர் மோடி

பயணத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கப்போவது அதிபர் ஜோ பைடன் உடனான பிரதமரின் சந்திப்பு

  • Share this:
இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாட்கள் கொண்டதாக இருக்கும் பிரதமரின் சுற்றுப்பயணம் எந்த தேதிகளில் இருக்கும் என இன்னும் இறுதி செய்யப்படவில்லை. செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரதமரின் அமெரிக்க பயணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு அவர் செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பயணத்தின் 3 முக்கிய அம்சங்கள்:

பயணத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கப்போவது அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு. அமெரிக்க அதிபராக அவர் பொறுப்பேற்ற பின்னர் இன்னும் பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து பேசவில்லை, ஆனால் ஒரு சில முறை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இருவரும் பேசியிருக்கின்றனர். இருவரின் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் முக்கியமாக இடம்பெறக்கூடும்.

இரண்டாவது முக்கிய அம்சமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். நியூயார்கில் உள்ள தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சபையில் செப்டம்பர் 21ம் தேதி உயர்மட்ட அளவிலான விவாதம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read:  தாலிபான்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் கட்டளையிட்டது – அம்பலப்படுத்திய ஆப்கன் துணை அதிபர்!

மூன்றாவதாக வாஷிங்டனில் நடைபெறும் குவாட் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு இதுவரை நேரடியாக நடைபெற்றதில்லை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

பயணத்தில் சிக்கல்:

இதனிடையே ஒலிம்பிக் போட்டிகளால் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக ஜப்பான் பிரதமருக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளதால், இம்மாத இறுதியில் அவர் பதவி விலகலாம் என ஒரு தகவல் கூறப்படுகிறது. அவர் பதவி விலகுவது உறுதியானால் குவாட் மாநாடு ஒத்திவைக்கப்படும். இந்த காரணத்தினால் பிரதமரின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி ஒரு புறம் எழுந்துள்ளது.

Also Read:    தேசவிரோத செயல்: இன்போசிஸ் நிறுவனம் மீது ஆர்.எஸ்.எஸ் ஊடகம் பகீர் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி கடைசியாக  2019ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: