தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுபோன்ற படங்கள் அடிக்கடி வெளிவர வேண்டும் என்று பிரதமர்
மோடி கூறியுள்ளார்.
1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The kashmir files) திரைப்படம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் அப்படத்திற்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம் என்ற தோற்றத்தையும் இப்படம் உருவாக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு இந்தியில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் காஷ்மீர் ஃபைல்ஸ். விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேலும் மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கு அளித்ததோடு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க -
காஷ்மீர் ஃபைல்ஸ்.. இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா ? வலுக்கும் விவாதம்
இது ஒரு பக்கமிருக்க இப்படம் வரலாற்றை திருத்தி பதிவு செய்ய முயற்சித்திருப்பதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன. JNU நிறுவனத்தை முழுக்க முழுக்க தீவிரவாத அமைப்பாக சித்தரித்திருப்பதோடு ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராகவும் மோடி அரசுக்கு ஆதரவாகவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்று சர்ச்சை எழுந்துள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் ரத்த வரலாற்றை பதிவு செய்வதாக சொல்லி இயக்குனரின் சொந்த கருத்துகளையும் தவறான அரசியல் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தி பாஜக-வின் விளம்பர படமாக வெளிவந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்கள் அடிக்கடி வெளிவர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பாராட்டிய பிரதமர் மோடி, இதுபோன்ற படங்கள் அடிக்கடி வெளிவர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.