குஜராத் பூங்காவில் கிளிகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பூங்காவை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் கூண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன் மோடி விளையாடி மகிழ்ந்தார்.

 • Share this:
  குஜராத் மாநிலத்தில், சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்துவைத்த பிரதமர் மோடி, பூங்காவில் இருந்த கிளிகளிடம் விளையாடி மகிழ்ந்தார்.

  குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், "ஆரோக்யா வன்" எனப்படும் மூலிகை பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. அவற்றின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிய தகவல்களையும் இந்த பூங்கா வழங்குகிறது. மூலிகை பூங்காவை திறந்த வைத்த பின், பிரதமர் மோடி அதனை பார்வையிட்டார்.


  அதன்பின்னர் ஏக்தா மால் எனப்படும் ஒற்றுமை வணிக வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35,000 சதுரஅடி பரப்பளவில் விரிந்துள்ள இந்த வளாகத்தில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் அடையாளச் சின்னத்தை மையப்படுத்தி இந்த வணிக வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தையும் குறிக்கும் 20 அரங்குகள் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

  இதனைதொடர்ந்து, குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா திறந்துவைக்கப்பட்டது. பூங்காவைச் சுற்றி ஊட்டச்சத்து ரயில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. "அன்னபூர்னா", "போஷன் புரான்", "ஸ்வஸ்தா பாரதம்" போன்ற பெயர்களின் மூலம் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டச்சத்து பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் 5D மெய்நிகர் அரங்கு மற்றும் பல்வேறு மெய்நிகர் விளையாட்டு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஊட்டச்சத்து ரயிலில் பயணம் மேற்கொண்டார்.  இறுதியாக சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் திறந்துவைத்தார்.
  அதன்பின்னர், பூங்காவை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் கூண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன் மோடி விளையாடி மகிழ்ந்தார்.


  இதனைதொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கான படகு போக்குவரத்தையும் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, படகில் பயணம் மேற்கொண்டார்.

  தொடர்ந்து, கெவாடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்ற பிரதமர், அங்கு பல வண்ண விளக்குகளால் மின்னும் காட்சிகளை தொடங்கிவைத்தார். இதன்மூலம், சர்தார் சரோவர் அணை, இரவு நேரத்தில் பார்வையாளர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.
  இதனைத் தொடர்ந்து, ஒற்றுமையின் சிலைக்கான இணையதளத்தையும், கெவாடியா மொபைல் செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார். கண்கவர் தோட்டத்தை பார்வையிட்டார். இதில், இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளை கண்டுகளித்தார்.
  Published by:Yuvaraj V
  First published: