கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளதால், விரைவில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரூ.16,000 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகை தந்துள்ளார். மாண்டியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றபோது அங்கே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களும் பாஜக தொண்டர்களும், நரேந்திர மோடி சென்ற கார் மீது மலர்களைத் தூவினர்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பிரதமர் சென்ற கார் மீது விடாமல் தொண்டர்கள் மலர்களைத் தூவிக்கொண்டே இருந்தனர். அப்போது மக்களுக்கு கையசைத்த பிரதமர் மோடி, காரில் நின்றபடியே மலர்களை மீண்டும் மக்கள் மீது வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் திறந்துவைத்து நாட்டுக்கு அர்பணித்தார். பெங்களூரு – நிதாகட்டா – மைசூரு தேசிய நெடுஞ்சாலை NH-275-ன் ஒரு பகுதியை ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இதில் அடங்கும். 118 கி.மீ தூரத்திலான இந்தத் திட்டம் ரூ.8,480 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சாலை பெங்களூரு மற்றும் மைசூருக்கு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 75 நிமிடங்களாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தார்வாடாவில் 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள ஐஐடி-தார்வாட் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்பணித்தார். ஹூப்பளி ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான ரயில்வே நடைமேடையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த சில நாள்களாக பெங்களூரு-மைசூரு விரைவுசாலை பற்றி பலரும் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். இது நாட்டின் இளைஞர்களை பெருமைப்படவைத்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை பற்றி பேசும் போது எல்லாம் நாம் கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ண ராஜ வாடியார் மற்றும் விஷ்வேஸ்வராய்யா ஆகியோர் நம் நினைவுக்கு வருவார்கள். நாட்டிற்கு அவர்கள் வழிகாட்டியாக இருந்தார்கள். இது போன்ற வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் வருவாய்காகன வழிகளை கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: “மக்கள் தொகை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்”... விநோத காரணம் சொன்ன மத்திய அமைச்சர்..!
எங்கள் அரசு ஏழைகளுக்கு தேடி சென்று தேவையான வசதிகளை செய்து வருகிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலோ மக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசை நோக்கி தேடி ஓடி அலையும் சூழலில் இருந்தனர். காங்கிரஸ் கட்சியினர் எனக்கு புதைகுழி தோண்ட கனவு கண்டு வருகின்றனர். அவர்கள் புதைகுழி தோண்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் நானோ ஏழை மக்களுக்காக தீவிரமாக வேலை செய்து வருகிறேன். நாட்டு மக்களின் ஆசி என்னை பாதுகாத்து வருகிறது என அவர்களுக்கு தெரியாது’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.