உத்தரப்பிரதேச மாநிலத்தில் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக் கழகம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவைத்தார். அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தைப் பார்வையிட்ட அவர், உடற்பயிற்சி செய்தார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்குள்ள மீரட் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார். ஆகுர்நாத் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அவருடன் ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஷகீத் ஸ்மாரக் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அரசின் அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் காரில் சென்ற பிரதமருக்கு சாலையின் இரு மருங்கிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
Also read: மனைவியின் தகாத உறவை நிரூபிக்க மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்
மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக் கழக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு சென்ற பிரதமர், விளையாட்டு வளாகத்தை பார்வையிட்டார். அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்ற அவர், உடற்பயிற்சிக்கான இயந்திரங்களை ஆய்வுசெய்தார். அங்குள்ள இயந்திரத்தில் பயிற்சி செய்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் விளையாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 700 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்தப் பல்கலைக் கழகம், இளைஞர்களுக்கு சர்வதேச விளையாட்டு வசதிகளை அளிக்கும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெறுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
Also read: மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்
விளையாட்டுத் துறைக்கான உபகரணங்கள் உற்பத்தியில் சுயசார்பு கொண்டதாக இந்தியா மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கையில், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக்காலங்களில் பணக்காரர்களுக்கு மட்டுமே விளையாட்டு வசதிகள் எட்டக்கூடியதாக இருந்த நிலை தற்போது மாறியுள்ளதாகவும், நாட்டில் விளையாட்டு மேம்பட வேண்டுமானால், விளையாட்டுத் துறையை தேர்வுசெய்ய இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
சலாவா, கைலி ஆகிய கிராமங்களில் அமையும் இந்த பல்கலைக் கழகத்தில் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கைப்பந்து, கூடைப்பந்து, கையெறி பந்து, கபடி ஆகியவற்றுக்கு தனித்தனியாக அதிநவீன மைதானங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், பளுதூக்குதல், வில்வித்தை ஆகியவற்றுக்கான வசதிகளும் இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, Narendra Modi