ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்பு கொடுக்காததோடு, அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்துள்ளார்.
ராமானுஜரின் 1,000ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் 216 அடி உயரத்தில் ஸ்ரீராமானுஜசாரியா சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில்தங்கம், வெள்ளி, காப்பர், பிராஸ் மற்றும் டின் ஆகிய ஐந்து வகை உலோகங்களால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சிலை கட்டுமான பணிகள், நிறைவு பெறுவதற்கு நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. 54 அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு கட்டுமானத்தின் மீது மாபெரும் தாமரை அமைத்து அதன் மேலே இந்த சிலை அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Also read: பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை
சிலைக்கு கீழே உள்ள கட்டடத்தின் தரைதளத்தில் 63,444 சதுர அடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ராமானுஜரின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவங்களை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தளத்தில் சுமார் மூன்று லட்சம் சதுர அடியில் ராமானுஜரின் கோவில் அமைந்துள்ளது. அங்கு தினசரி வழிபாட்டுக்காக 120 கிலோ தங்கத்திலான அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
மூன்றாவது தளத்தில் 14,700 சதுர அடியில் வேதிக் டிஜிட்டல் நூலகமும், ஆராய்ச்சி மையமும் இடம்பெற்றுள்ளது. தாமரை இடம்பெற்றுள்ள பகுதிக்கு பத்ராவதி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலையை சுற்றியுள்ள 34 ஏக்கர் பரப்பளவில் 108 திவ்ய தேசங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வருகை தந்தார். அவரை வரவேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமான நிலையம் வராமல் புறக்கணித்தார். அதோடு, பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்துள்ளார்.
Exclusive | மோடிதான் எங்கள் பாதுகாவலர்: அவருடன் கருத்து முரண்பாடு இல்லை- யோகி ஆதித்யநாத்
இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
அண்மைக் காலமாக பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர் பிரதமரை நேரில் சந்திப்பதை தவிர்த்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.