இந்தியாவின் அமைதியை ராணுவ வீரர்களின் வலிமை உறுதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜம்முவின் நவ்ஷெரா பகுதியில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய மோடி இவ்வாறு கூறினார்.
2014 -ல் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமரானது முதல், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ராஜஸ்தானில் அமைதியான முறையில் மோடி தீபாவளி கொண்டாடினார்.
கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வருவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் முன்பைப் போல களைகட்ட தொடங்கி உள்ளன. இதையொட்டி தீபாவளியை மோடி ராணுவத்தினருடன் ஜம்முவில் கொண்டாடுவார் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று காலை ஜம்முவின் நவ்ஷெரா பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் ராணுவத்தினர் மத்தியில் அவர் பேசியதாவது: -
தீபாவளி பண்டிகையை எனது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு முடிவுசெய்தேன். எனவேதான் உங்களுடன் இணைந்து தீபாவளியை நான் கொண்டாடுகிறேன். இந்தியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றால் அதற்கு ராணுவ வீரர்கள் தான் முக்கிய காரணம். ஒவ்வொரு தீபாவளியையும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன்.
இன்றைக்கு நூறு கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக உங்களிடம் வந்துள்ளேன். இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை என்றைக்கும் மறக்க முடியாது. உலகத்தில் புதிய போர் முறைகள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றை நாம் முழுமையாக கற்று, நடைமுறைப்படுத்த தயாராக வேண்டும். எதிரிகளை வீழ்த்துவதில் புதிய உத்திகளை கையாள வேண்டும்.
பாதுகாப்புத் துறையில் பெரும்பாலும் நாம் இறக்குமதிகளையே நம்பி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். உள்நாட்டிலேயே நமக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிலையை இந்தியா அடையும். ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகள் இந்தியாவை தாக்க முயற்சிக்கும் போது அவர்களுக்கு சரியான பதிலடியை இந்திய ராணுவத்தினர் அளிக்கின்றனர். அவர்களது நலனுக்கு மத்திய அரசு என்றைக்கும் முக்கியத்துவம் அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
Published by:Abdul Mushtak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.