உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மத்திய அரசு மீட்கும் என்று பிரதமர் நரேந்திர
மோடி உறுதி அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 5ம் கட்ட தேர்தலையொட்டி அங்குள்ள பஸ்தி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது-
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக நாம் ஆபரேஷன் கங்கா என்பதனை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக அரசு அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.எந்த சிரமம் ஏற்பட்டாலும் அதை நாங்கள் தாங்கிக் கொண்டு, குடிமக்களை பாதுகாக்கிறோம்.
இதையும் படிங்க -
'பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் இல்லை; வரியும் இல்லை' : சிவசேனா கடும் விமர்சனம்
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து மாநிலத்தை சீரழித்து விட்டனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் தடையாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
உக்ரைன் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அண்டை நாட்டிற்கு தரைமார்க்கமாக வரும் இந்தியர்களை அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்த வகையில் ரொமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 198 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு 4 வது இந்திய விமானம் டெல்லிக்கு தற்போது புறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
''எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது'' : பாதுகாப்புத்துறை அமைச்சர்
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக 240 பேருடன் 3வது இந்திய விமானம் டெல்லிக்கு இன்று காலை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.