இந்தியாவில் 142 மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதாகவும், அதனை முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பிற மாவட்டங்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், பிற மாவட்டங்களின் சவால்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நல்லாட்சி நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் தரவுகள்படி இந்தியாவில் 142 மாவட்டங்கள் பின்தங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
Also read... பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!
இந்த மாவட்டங்கள் முன்னேறியுள்ள மாவட்டங்களில் செய்யப்படும் அணுகுமுறையை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
மத்திய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இது ஒரு புதிய சவாலாக அமையும் என்று கூறிய பிரதமர் மோடி, இதனை அனைவரும் கூட்டாக சேர்ந்து சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,குஜராத், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.