ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை; நாடாளுமன்றத்தில் மோடி அறிவிப்பு - உவைசி விமர்சனம்

மோடி

 • Share this:
  அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவ்வாறு கூறியுள்ளார்.

  நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது உரையில், ”இன்று காலை நடைபெற்ற அமைச்சரவையில் அயோத்தி அறக்கட்டளை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க நாம் ஓர் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளோம். அதன் பெயர் ஸ்ரீ ராமஜென்மபூமி திர்த்த ஷேத்ரா. அந்த அமைப்பு சுதந்திர அமைப்பாக இருக்கும்” என்றார்.

  மேலும், ”இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள் யாராயினும் சரி, எல்லாரும் ஒரு ’பெரும் குடும்பத்தின்’ அங்கத்தினர். இன்னொரு பெரிய முன்னெடுப்பை ராமர் கோவில் யாத்திரிகர்களுக்காக நாம் எடுத்துள்ளோம். அறக்கட்டளைக்காக கோவிலுக்கு அருகிலேயே சுமார் 67 ஏக்கர் நிலத்தை ஒதுக்குகிறோம்” என்று தெரிவித்தார்.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”அந்த அறக்கட்டளை 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அதில் தலித் பிரதிநிதி ஒருவர் இருப்பார். அவர் 67 ஏக்கருக்கு பொறுப்பாளராக இருப்பார்” என்று கூறினார்.

  இதனிடையே, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஐந்து ஏக்கர் நிலத்தை அயோத்தியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக சன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

  கடந்த நவம்பர் 9ஆம் தேதி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் வெளியான வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பில் உச்ச நிதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி, ஓர் அறக்கட்டளையை உரிய விதிமுறைகளுடனும், அறங்காவலர் குழு அல்லது ஒரு பொருத்தமான அமைப்பையும் அமைக்க வேண்டும். மேலும், அறக்கட்டளையின் செயல்பாடுகள், அறங்காவலர்களின் அதிகார வரம்புகள், நிலத்தை அறக்கட்டளைக்கு மாற்றுவது என அனைத்து தேவையான விஷயங்கள் குறித்தும் மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

  மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், புதிதாக மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் உத்திரப் பிரதேசத்தின் ஹோலி டவுனில் பிரதான இடத்தை சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியது. ராமர் பிறந்ததாக இந்துக்களுள் பலர் நம்பும் பகுதியில் கோவில் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

  அறக்கட்டளை அமைக்கும் மோடியின் அறிவிப்பு வெளியான நேரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள AIMIM தலைவர் அசதுத்தீன் உவைசி, ”ஃபிப்ரவரி 11ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வு முடிவடையவுள்ளது. இந்த அறிவிப்பு ஃபிப்ரவரி 8ஆம் தேதிக்கு (டெல்லி தேர்தல் நடைபெறும் நாள்) மேல் வந்திருக்கலாம். பாஜக பயப்படுவது போலத் தெரிகிறது” என்றார். மேலும் அவர் கூறுகையில், ”சன்னி வக்ஃப் வாரியம் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ளக் கூடாது. உச்ச நீதிமன்றம் உச்சபட்சமானது; ஆனால் தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. பிரதமரின் அறிவிப்பு தேர்தல் விதிமுறையை மீறுவதாகும்” என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, அறக்கட்டளை தொடர்பாக அறிவிப்பு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஃபிப்ரவரி 9ஆம் தேதி வரை காலக்கெடு கொடுத்துள்ளதால் தேர்தல் விதிகளை இந்த அறிவிப்பு மீறவில்லை என்றனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: