பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டார்.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது வரை 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சுகாதார, முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 3ம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்-க்கு கால இடைவெளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொண்டார். அவருக்கு பாண்டிச்சேரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் இருவர் தடுப்பூசி போட்டனர்.
Got my second dose of the COVID-19 vaccine at AIIMS today.
Vaccination is among the few ways we have, to defeat the virus.
இந்நிலையில் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு 2ம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. பிரதமருக்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த நிவேதா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் செலுத்தினர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வைரஸைத் தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி உள்ளது. தடுப்பூசிக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், விரைவில் உங்கள் ஷாட்டைப் பெறுங்கள். CoWin.gov.in தளத்தில்பதிவு செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.