பீகாரில் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது - 3ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பீகார் தேர்தல்

பீகாரில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. இதுவே தனது கடைசி தேர்தல் எனக் கூறி, இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டார்.

  • Share this:
    பீகாரில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் முன்னணி அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், பூர்னியாவில் (Purnia) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, இதுவே தனது கடைசித் தேர்தல் என்று உருக்கமாக பேசினார்.

    ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், சஹர்சா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அலைகடலென ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். பொதுக்கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி, நாட்டில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார். இதை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகவும் விமர்சித்தார்.



    இபோன்று, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், நிதிஷ் குமார் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணாமல், பதவிக்காக உழைப்பதாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின் நிதிஷ் குமார் காணாமல் போவார் என்றும் சிராக் கூறினார்.

    சனிக்கிழமை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் மாலையுடன் ஓய்ந்தது. பீகாரில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆயத்த நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
    Published by:Rizwan
    First published: