பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு திருவனந்தபுர விமானநிலையம் தங்ககடத்தல் மையமானது எப்படி? - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி

பினராயி விஜயன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி தங்கக் கடத்தலின் மையப்பகுதி ஆனது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்துவருகிறது. இந்தநிலையில், கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் முக்கிய அம்சமாக இடம்பிடித்துள்ளது.

  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனுக்கு 7 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலையம் தங்கக் கடத்தலின் மையமாக மாறியது எப்படி என்பதற்கு அமித் ஷா தான் பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

  தங்கக் கடத்தல் வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் எனவும், அதை தவிர்த்து யாரையும் அச்சுறுத்த நினைத்தால், அது இங்கே எடுபடாது எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: