பாகிஸ்தானின் விமானத்தை சுட்டுவீழ்த்தி பின்னர் எதிர்பாராத விதமாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் ராஜஸ்தான் பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெற உள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய சேதம் இல்லை, மரங்கள் மீதே இந்தியா குண்டு வீசியுள்ளது என்று பாகிஸ்தான் கூறியது. எனினும், மசூத் அசார் நடத்தும் மதராசாக்கள் மீது குண்டு விழுந்துள்ளதாக அவரின் சகோதரர் பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.
Read Also... பாக். சிறையில் உள்ள 54 அபிநந்தன்கள் எப்போது வருவார்கள்?
பாகிஸ்தான் விமானப்படையின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, எதிர்தாக்குதலால் அபிநந்தன் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர்.
எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார். கடந்த 1-ம் தேதி இரவு வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பிய அவர் தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
அவர் உடலில் ரகசிய கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் தான் காக்பிட்-க்கு (விமானத்தில் உள்ள விமானியின் அறை) திரும்ப வேண்டும் என்று அபிநந்தன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Read Also... பாராசூட் மூலம் குதிப்பதற்கு முன் அபிநந்தன் கடைசியாக அனுப்பிய ரேடியோ மெசேஜ்!
போர் விமானத்தை இயக்குவதற்கு அவர் மேலும் சில மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவரால் போர் விமானத்தை இயக்க முடியாது என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், அபிநந்தனின் பாகிஸ்தான் எபிசோட் விரைவில் பாட புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
Also See....
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.