ராஜஸ்தான் மாநிலத்தில் தனது ஆதரவாளர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தள் 1 தொகுதியில் வெற்றிபெற்றது. அதனையடுத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் அளவிற்கான பெரும்பான்மை கிடைத்தது. அதனையடுத்து, யார் முதல்வராக தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி காங்கிரஸ் தலைமைக்கு எழுந்தது.
இளம் தலைவராக வளர்ந்திருக்கும் சச்சின் பைலட்டுக்கும், மூத்தத் தலைவர் அசோக் கெஹ்லாட்டுக்கு இடையில் பலத்தப் போட்டி நிலவுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரமாகக் களப்பணி செய்து இளம் தொண்டர்கள் மத்தியில் சச்சின் பைலைட் செல்வாக்கைப் பெற்றுள்ளார். அதேநேரத்தில் ஏற்கெனவே ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெஹ்லாட் நீண்ட காலமாக முக்கியத் தலைவராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், அசோக் கெஹ்லாட்டை காங்கிரஸ் கட்சி முதல்வராக தேர்ந்தெடுக்கும் தகவல்கள் வருகின்றன. அதனையறிந்த, சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த சச்சின் பைலட், ‘காங்கிரஸ் தலைமையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அதே நேரத்தில் கட்சித் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதனை நான் வரவேற்கிறேன். நமது கட்சியின் மரியாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மட்டுமல்ல மூன்று மாநில முதல்வர்களைத் தேர்வு செய்வதில் காங்கிரஸின் குழப்பம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.