மசூதிகள் எரிக்கப்படுவது, இடிக்கப்படுவது போன்ற போலியான படங்களை பயன்படுத்தி போலி சமூக வலைத்தள கணக்குகளின் மூலம் மத மோதலை உருவாக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவதாக திரிபுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள், கோவில்களை குறிவைத்து நடைபெற்ற தொடர் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து கடந்த செவ்வாயன்று (அக் 26), அந்நாட்டின் எல்லையை ஒட்டிய திரிபுரா மாநிலத்தின் பனிசகர் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணி ரோவா பஜார் பகுதியை அடைந்த போது சில வீடுகள், கடைகள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. அப்போது மசூதி ஒன்றின் மீதும் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள சம்தில்லா, தர்மநகர் பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதனையடுத்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே விஹெச்பி பேரணியின் போது மசூதிகள் நொறுக்கப்பட்டதாகவும், தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பரவி வைரலானது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடீயோக்கள், தகவல்கள் போலியானவை என திரிபுரா காவல்துறை தற்போது விளக்கம் தந்துள்ளது.
Also read: சவுதி அரேபியாவுடன் மீண்டும் துளிர்க்கும் நட்பு.. பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்!
திரிபுரா மாநில காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சில நபர்கள் போலி சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தி திரிபுரா குறித்து போலி செய்திகள், தகவல்களை பரப்பியுள்ளனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை கட்டுக்குள் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என கூறியுள்ளனர்.
விஹெச்பி பேரணியில் புகுந்த சமூக விரோதிகள்:
இதனிடையே திரிபுரா சட்ட ஒழுங்கு ஐஜி சவுரப் திரிபாதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “பனிசகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு குறித்து சில பொய்யான தகவல்கள், கட்டுக்கதைகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. எந்த மசூதியிலும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also read: மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியில் புகுந்த சில சமூக விரோதிகள், வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
Fake news & rumours are being spread in regard to yesterday's incident at Panisagar. No fire incident took place at any mosque. A case has been registered against the viral fake posts on social media platforms: Tripura Police IGP Law and order Saurabh Tripathi (27.10) pic.twitter.com/Sr1hK2huDY
— ANI (@ANI) October 27, 2021
அந்த பேரணி நடைபெற்ற போது ஒரு குறிப்பிட்ட குழுவினர் சம்தில்லா பகுதியில் இருந்த மசூதி ஒன்றின் கதவு மீது கல்லெறிந்தனர். பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்” இவ்வாறு ஐஜி தெரிவித்தார்.
பதற்றத்தை தவிர்க்க மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.