ஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75.26 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 69.57 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

news18
Updated: September 18, 2019, 8:25 AM IST
ஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்
பெட்ரோல் நிலையம் மாதிரிப் படம்
news18
Updated: September 18, 2019, 8:25 AM IST
சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து பெட்ரோலிய இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான அரம்கோ பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தினசரி 57 லட்சம் பேரல் பெட்ரோலிய உற்பத்தியும், 200 கோடி கனஅடி எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால், ஈரானே காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டியுள்ளன.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


சவுதி அரேபிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சவுதி இளவரசர், பெட்ரோலிய உற்பத்தி அடுத்த சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்தார். பெட்ரோலிய உற்பத்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை சரிசெய்துள்ளதாகவும், 50 சதவீத உற்பத்தி பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு இந்த மாதமும், அடுத்த மாதமும் வழங்கப்பட வேண்டிய பெட்ரோலியத்தை முழுமையாக வழங்க உள்ளதாக அரம்கோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், கனரக கச்சா எண்ணெய்க்குப் பதிலாக இலகுரக கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக இந்திய எண்ணெய்க் கழகத்திடம் தெரிவித்துள்ளது. கனரக கச்சா எண்ணெய் என்பது அதிக அடர்த்தி கொண்டதாகவும், இலகுரக எண்ணெய் என்பது அடர்த்தி குறைவானதாகவும் இருக்கும்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘ரஷ்யாவிலிருந்து பெட்ரோலிய இறக்குமதியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்டின் தலைமை செயல் அதிகாரி இகோர் செச்சினுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் முதலீடுகளை அதிகரிக்க 4 இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்

Loading...

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75.26 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 69.57 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

Also watch

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...