ஒடிசா : மக்களது கவனத்தைப் பெறும் ஒரு ரூபாய் கிளினிக்!

ஒடிசா : மக்களது கவனத்தைப் பெறும் ஒரு ரூபாய் கிளினிக்!

ஒடிசா மருத்துவர்

பர்லா பகுதியில் கிளினிக் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து சிகிச்சைக் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே பெற்று வருகிறார்.

  • Share this:
    ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் (Sambalpur) மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க `ஒரு ரூபாய் கிளினிக்’ ஒன்றைத் தொடங்கியுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

    பர்லா (Burla) பகுதியில் அமைந்துள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (VIMSAR) உதவி பேராசிரியராக சங்கர் ராம்சந்தானி பணியாற்றி வருகிறார். சங்கர், பர்லா பகுதியில் கிளினிக் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து சிகிச்சைக் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே பெற்று வருகிறார். தன்னுடைய பணி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நீண்டகால விருப்பத்தின் ஒரு பகுதியாக இந்த கிளினிக்கை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மருத்துவர் சங்கர், ``நான் மருத்துவமனையில் சேர்ந்தபோது தனியாக பயிற்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே, என்னால் தனியாக கிளினிக்கை தொடங்க முடியவில்லை. ஆனால், சமீபத்தில் நான் உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இதனால், தனியாக பயிற்சி செய்ய பணி நேரம் முடிவடைந்த பின்னர் கிளினிக் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது வாடகை வீடு ஒன்றில் கிளினிக்கை தொடங்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

    சிகிச்சைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருப்பது தொடர்பாக பேசிய மருத்துவர் சங்கர், ``ஏழை மற்றும் எளிய மக்களிடம் இருந்து சிகிச்சைக் கட்டணமாக ஒரு ரூபாயை பெற்று வருகிறேன். ஏனெனில், சிகிச்சையை இலவசமாக பெறுவதாக அவர்கள் உணர்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சிகிச்சைக்காக சிறிய அளவிலாவது பணம் செலுத்தியதாக அவர்கள் நினைக்க வேண்டும். நான் வெகுஜன மக்களுக்காக மருத்துவராக இருக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த கிளினிக் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது.

    சங்கரின் மனைவி பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருகிறார். இவரும் கிளினிக்கில் இருந்தபடி சங்கருக்கு உதவிகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இந்த கிளினிக்குக்கு சுமார் 33 நோயாளிகள் வந்ததாக தெரிவித்துள்ளார். சங்கரின் கிளினிக் தற்போது பரவலாக கவனம் பெற்று வருகிறது. இதற்கு முன்பும் தன்னுடைய சேவைகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

    கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது நோயாளிகளை தன்னுடைய காரில் அழைத்து சென்று பலரது கவனத்தையும் பெற்றார். 2019-ம் ஆண்டு தொழு நோயாளி ஒருவரையும் தன்னுடைய கைகளில் ஏந்தியபடி அழைத்துச்சென்று வீட்டில் இறக்கி விட்டுள்ளார். இதற்கும் பலரது கவனத்தையும் பெற்றார். ``மறைந்த என்னுடைய தந்தை என்னிடம் நர்சிங் ஹோம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. நர்சிங் ஹோமில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். எனவேதான், இந்த `ஒரு ரூபாய் கிளினிக்கை’ திறக்க முடிவு செய்தேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Ram Sankar
    First published: