பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் புதன்கிழமையும் முடங்கியது. மக்களவையில் காகிதங்களை கிழித்து வீசி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பெகாசஸ் செயலி மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது. மக்களவை புதன்கிழமை காலை கூடியதும், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எனினும், தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் முதல்முறையாக கேள்வி நேரம் முழுமையாக நடைபெற்றது. இதையடுத்து, பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் காகிதங்கள் மற்றும் கோப்புகளை கிழித்து அவைத் தலைவர் இருக்கையின் மீதும், அமைச்சர்களை நோக்கியும் வீசினர். இதையடுத்து மக்களவையை அரை மணிநேரத்துக்கு அவையை நடத்திவந்த ராஜேந்திர அகர்வால் ஒத்திவைத்தார்.
Also Read : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி
பின்னர் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு மணிக்கு அவை கூடியபோது, திவாலாதல் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பதாகைகளை காண்பித்தனர். இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 2.45 மணிக்கு அவை கூடியபோது, சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கலந்துகொண்டார். இதேபோல, காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளவில்லை.
பின்னர் கொட்டும் மழையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, பணவீக்கம், பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் தாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார். இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது பெகாசஸ் என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது ஏன் என்பதை நரேந்திர மோடியும், அமித் ஷா-வும் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவதாக ராகுல் கூறினார். ஆனால், விவாதம் நடத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். மேலும், மோடி அரசு பதவிவிலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lok sabha, Parliament, Rahul gandhi