பக்கவாதத்தால் தற்கொலைக்கு முயன்றவர்.. 900 உயிர்களை காப்பாற்றி ஆக்ஸிஜன் மேன் ஆன கதை

கவுரவ் ராய்

10 ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்டது இவரது வங்கி இன்று 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுள்ளது.

 • Share this:
  மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் 900 உயிர்களை காப்பாற்றிய பாட்னாவின் ஆக்ஸிஜன் மேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டால் அதனை இலவசமாக வழங்கி வருகிறார். தன்னிடம் இருக்கும் சிறிய வேகன் ஆர் காரில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கி வருகிறார்.  அதிகாலை 5 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு கிளம்பும் இவர் வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடுகிறது. தினமும் காலை 5 மணிக்கு அவரே காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார்.

  இந்த ஆக்ஸிஜன் மேன் உண்மையான பெயர் கவுரவ் ராய். 2019-ல் பக்கவாதம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கங்கை நதியை அடைந்துள்ளார். பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என கங்காதேவி கூறினாரோ என்னவோ தற்கொலை முடிவில் இருந்து பின்வாங்கி வீடு திரும்பியுள்ளார் கவுரவ் ராய். 2020 கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியவர் தான் இந்த கவுரவ் ராய். இன்று பலரின் உயிரை காத்து வருகிறார்.

  52 வயதாகும் கவுரவ் ராய் கடந்தாண்டு ஜூலை மாதம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த நேரம் அது. கவுரவ் ராய்-க்கு பாட்னா மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கவில்லை. படிக்கட்டுகளுக்கு கீழேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவும் குறைந்துள்ளது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். 5 மணி நேரத்துக்கு பிறகு அவரது மனைவி ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளார்.

  கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தும் மருத்துவமனையில் இருந்த நாள்களை எண்ணிப்பார்த்துள்ளார். ஆக்ஸிஜன் கிடைக்காமல் தான் அவதிப்பட்ட அந்த சில மணி நேரங்கள் அவரை தொந்தரவு செய்துள்ளது. இதனையடுத்து ஆக்ஸிஜன் வழங்க முடிவு செய்துள்ளார். தனது சொந்த பணத்தில் பாட்னாவில் தங்களது குடியிருப்புக்கு கீழ் சிறிய ஆக்ஸிஜன் வங்கியை உருவாக்கினர். இந்த தகவல் ட்விட்டர். ஃபேஸ்புக் மூலம் அவர்களது நண்பர்களால் பரவியது. 10 ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்டது இன்று 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுள்ளது.

  ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் ஓடுகிறார். யார் யாருக்கு ஆக்ஸிஜன் தேவை இருக்கிறதோ அவர்களின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்குகிறார். அவர்கள் உடல்நலன் தேறிய பின்னர் சிலிண்டர்களை எடுத்துக்கொள்கிறார். இதற்காக அவர் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. பாட்னா மட்டுமல்லாமல் பீகாரின் 18 மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறார். நான் நடமாடும் வரை இந்தப்பணியை செய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
  Published by:Ramprasath H
  First published: