இந்தியா - வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை மே 29ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் சேவையானது, வங்கதேசத்தில் உள்ள பல நகரங்களுக்கு செல்கிறது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது.
வங்கதேச ரயில்வே துறை சார்பில் கொல்கத்தா - டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கவும், இந்திய ரயில்வே துறை சார்பில் கொல்கத்தா - குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கவும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று என்ஜேபி - டாக்கா மிடாலி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சேவையானது ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த சேவையை இந்தியா மற்றும் வங்கதேச ரயில்வே அமைச்சர்கள் ரயில் பவனில் இருந்து காணொலி காட்சி மூலமாக கொடியசைத்து தொடக்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வங்கதேச ரயில்வே அமைச்சர் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் :
மைத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது முழுவதும் ஏசி வசதி மற்றும் புத்தம்புது தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சர்வதேச அளவிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாகும். இது வங்கதேசத்தின் டாக்கா நகரையும், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரையும் இணைக்கிறது. முன்னதாக, இந்திய பிரிவினைக்கு முன்பாகவே இந்த இரு பகுதிகளுக்கும் இடையே பிரிட்டீஷ் அரசு சார்பில் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதில் இருந்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இரண்டாம் ரயில் சேவை :
கடந்த 2017ஆம் ஆண்டில், பந்தன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையானது கொல்கத்தா நகரையும், வங்கதேசத்தின் குல்னா நகரையும் இணைக்கிறது.
Also Read : "ஜீன்ஸ் பேண்ட் அணிய எதிர்ப்பு".. சிறுமியை குடும்பத்தினரே அடித்துக்கொன்ற கொடூரம்!
வாரம் 5 முறை செல்லும் மைத்ரி எக்ஸ்பிரஸ் :
மைத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 5 முறை இயக்கப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சுமார் 400 கி.மீ. பயணத்திற்குப் பிறகு இந்த ரயில் சேவை டாக்கா நகரை சென்றடைகிறது. முன்னதாக, இந்த ரயில் சேவையில் இரண்டு இடங்களில் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. முதலாவதாக இந்திய தரப்பில் கெடே என்ற இடத்திலும், வங்கதேச தரப்பில் டோர்ஷோனா என்ற இடத்திலும் இந்த சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன.
Also Read : 4 தலைமுறைகளை தாண்டிய 108 ஆண்டு வழக்கிற்கு ஒரு வழியாக தீர்ப்பு கிடைத்தது
இதற்கிடையே, கொரோனாவுக்கு முந்தைய சமயங்களில் பந்தன் எக்ஸ்பிரஸ் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமை என வாரம் இருமுறை அடிப்படையில் இந்த ரயில் சேவை இயங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எஜ்ஜேபி முதல் டாக்கா வரையிலான மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.