முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும், அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற மக்களவை கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்று பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அவர்களை இருக்கைக்கு திரும்புமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே சுமார் 40 நிமிடங்கள் கேள்வி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். பின்னர், பகல் 12 மணிக்கு சபை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கோஷம் எழுப்பினர். இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பின்னர், மாலை 4 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடியபோது, தீர்ப்பாய சீர்திருத்தங்கள் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், பெகாசஸ் உளவு பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே கேள்வி நேரம் சிறிது நேரம் நடத்தப்பட்டது. பிறகு, சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியபோது, கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனால் சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2 மணிக்கு சபை கூடியபோது, பாஜக உறுப்பினர் புவனேஷ்வர் கலிதா, சபையை நடத்தினார். அவர், திவால் சட்ட திருத்த மசோதாவை விவாதத்துக்கு முன்வைக்குமாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

Must Read : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி

அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். அதற்கிடையில், மசோதா மீது விவாதம் தொடங்கியது. பிஜு ஜனதாதள எம்.பி. அமர் பட்நாயக், முதலில் பேசினார். பின்னர், அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்ட உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இறுதியில், குரல் வாக்கெடுப்பு மூலம் திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தடுக்கின்றனர். அச்சுறுத்தும்வகையில் சூழ்ந்துகொண்டு நிற்கின்றனர். இதை ஏற்க முடியாது. அவைத்தலைவரை நோக்கி காகிதங்கள் வீசுவது சரியல்ல” என்று கூறினார். இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

First published:

Tags: Parliament, Parliament Session