நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து; ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து; ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்

கோப்புப்படம்

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பாதிப்புக்கு இடையே சமூக இடைவெளியுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட கூட்டத் தொடர் கொரோனா தொற்று காரணமாக 8 நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது 40க்கும் மேற்பட்ட எம்பிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அத்துடன், கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில அமைச்சர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

  தற்போது, டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை வீசி வரும் நிலையில், நவம்பர் இறுதிவாரம் தொடங்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு நடைபெறாது என காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கடுமையான குளிர் நிலவும் சமயத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எளிதல்ல. குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்தாமல் நேரடியாக ஜனவரி மாதம் பட்ஜெட் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

  விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் பற்றி விவாதிக்கவும் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என கடந்த மூன்றாம் தேதி காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு் கடிதம் எழுதியிருந்தார். நாடாளுமன்ற வரலாற்றில் 1975, 1979 மற்றும் 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: