32 மில்லியன் இந்தியர்களை மிடில் கிளாஸிலிருந்து வறுமை நிலைக்கு தள்ளியுள்ள கொரோனா!

32 மில்லியன் இந்தியர்களை மிடில் கிளாஸிலிருந்து வறுமை நிலைக்கு தள்ளியுள்ள கொரோனா!

மாதிரி படம்

கோவிட்-19 வைரஸ் உலகில் நுழைந்து ஓர் ஆண்டை கடந்தும் இன்னும் அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா என்னும் கோவிட்-19 வைரஸ் உலகில் நுழைந்து ஓர் ஆண்டை கடந்தும் இன்னும் அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றன உலக நாடுகள். ஒரு பக்கம் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மறுபக்கம் இன்னும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்காதது, வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பின்னைடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகி தீவிரமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலை அதனால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட லாக்டவுன் ஏற்படுத்திய பொருளாதார இழப்பிலிருந்தே பொதுமக்கள், நிறுவனங்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்னும் மீளவில்லை. நம் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதற்கு அடுத்தபடியாக மிடில் கிளாஸ் என்னும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். இதனிடையே கொரோனா தொற்றால் ஏற்பட்ட தூண்டப்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சுமார் 32 மில்லியன் இந்தியர்கள் அதாவது 3.2 கோடி பேர் நடுத்தர வர்க்கம் என்ற நிலையில் இருந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வேலை இழப்புகள் மில்லியன் கணக்கான இந்தியர்களை வறுமையில் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட பியூ ஆராய்ச்சி நிறுவனம் (Pew Research Centre) கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தில் இருந்த 99 மில்லியன் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 66 மில்லியனாக (மூன்றில் ஒரு பங்கு) குறைந்துள்ளதாக தெரிகிறது.

கோவிட்-19 முதலில் உருவானதாக கருதப்படும் சீனாவை ஒப்பிடும்போது, கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை குறைந்து, வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை மேற்கோள் காட்டி பியூ நிறுவனம் கூறி உள்ளது. இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019 வரை சுமார் 57 மில்லியன் மக்கள் நடுத்தர வருமான வர்க்கத்தில் இணைந்தனர் இன்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also read... மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய நிதி தொடர்பான பணிகள்!

கடந்த ஆண்டு ஜனவரியில், 2020ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 5.8% மற்றும் 5.9% என்றும் உலக வங்கி கணித்துள்ளது. வைரஸால் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக ஒவ்வொரு நாளும் 2 டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானம் கொண்ட ஏழை மக்களின் எண்ணிக்கை 75 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர உள்நாட்டு எரிபொருள் விலையில் வரலாறு காணாத உயர்வு, வேலை இழப்புகள் மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நேரடியாக பல மில்லியன் கணக்கானோரை பாதித்துள்ளன.

இதனால் குடும்ப பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த பலர் வெளிநாடுகளில் வேலை தேட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. சீனாவை பொறுத்தவரை கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரங்களின் வீழ்ச்சி தீவிரமானதாக இல்லை. மிதமானதாகவே இருந்தது. அதே நேரத்தில் வறுமை நிலைகள் மாறாமல் இருந்தன என்றும் பியூ நிறுவன அறிக்கை கூறியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: