போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் அவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, பயணிகள் விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 75 சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ருமேனியா மார்க்கமாக உக்ரைனில் இருந்து இதுவரை 8,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புகாரெஸ்ட் நகரில் இருந்து இந்தியர்களுடன் கடைசி விமானம் புதன்கிழமை கிளம்புகிறது.
காலம் கருதி செய்த உதவிய ருமேனியா அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. ரஷ்யா தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுமி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், உக்ரைன் அரசின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டனர். உக்ரைன் நாட்டின் மேற்கு நோக்கி அவர்கள் பயணம் மேற்கொள்ள தொடர்ந்து உதவுவோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சுமியில் இருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகருக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து மாணவர்களை சிறப்பு ரயில் மூலம் போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது. இதனிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி அஸ்மா ஷஃபீக்கை போர்ப் பகுதியிலிருந்து மேற்கு எல்லைக்கு இந்திய அதிகாரிகள் மீட்டுவந்துள்ளனர். இது கறித்து அந்த மாணவி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வங்கதேசத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டதற்காக, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்பு: நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கம்
இதேபோன்று, நேபாளம் மற்றும் துனிசியா நாட்டை சேர்ந்த மாணவர்களையும் இந்திய அரசு மீட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் சிக்கியிருந்த மீதமுள்ள இந்திய மாணவர்களும் மீட்கப்பட்டு மேற்கு நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைவில் அண்டை நாடுகளுக்கு செல்ல இருப்பதாகவும், அங்கிருந்து தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.