காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐநா மனிதஉரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐநா மனித உரிமை ஆணையத்தின் 42-வது கூட்டம், ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். முதல்முறையாக காஷ்மீரை இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்று கூறிய அவர், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதலே, நிலைமை மோசமடைந்திருப்பதாகவும், மனிதஉரிமை மீறல்கள் அரங்கேற்றப்படுவதாகவும் கூறினார்.
எதிர்பாராத விதமாக, ஆகஸ்ட் 5-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா விதிகளுக்கு முரணானது. அதன்பிறகு, நிலைமை மோசமடைந்துள்ளது. 36-வது நாளாக இரவும், பகலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. உணவுப் பிரச்சினையும் உள்ளது.
எனவே, காஷ்மீர் விவகாரத்தில் அமைதியாக இருந்துவிடக் கூடாது என்றும், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஐநா மனிதஉரிமை ஆணையத்துக்கான இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விமர்ஷ் ஆர்யன், தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தையே இந்தியா திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஷியா பிரிவினர், இந்துக்கள் உள்ளிட்டோர் மீது அத்துமீறல்கள் நடத்தப்படுவதாக அவர் பட்டியலிட்டார்.
காஷ்மீரில் வன்முறையைத் தூண்டிவிட சில பாகிஸ்தான் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மனிதஉரிமைகளை மீண்டும் மீண்டும் மீறிவரும் பாகிஸ்தான், மற்றவர்களுக்கு மனிதஉரிமைகளைப் பற்றிக் கூற அருகதை இல்லை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே ஜம்மு-காஷ்மீர் தொடர்ந்து இருக்கும். சர்வதேச தீவிரவாதத்துக்கு மையமாக திகழும் பாகிஸ்தான், மற்ற நாடுகளின் மனிதஉரிமைகள் குறித்து பேசுகிறது. மனிதஉரிமை மீறலில் மிகவும் கொடுமையானது தீவிரவாதம் என்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது.
இந்தக் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளை தங்களது பக்கம் ஈர்க்கும் பாகிஸ்தானின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Article 370, Jammu and Kashmir