• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கங்கனாவிடமிருந்து பத்ம விருதை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

கங்கனாவிடமிருந்து பத்ம விருதை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

பத்ம விருதுபெறும் கங்கனா

பத்ம விருதுபெறும் கங்கனா

'' பத்ம விருது போன்ற உயர்ந்த விருதுகளை வழங்கும் முன்பாக, அதற்கு தகுதியானவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.''

  • Share this:
    இந்தியா விடுதலை குறித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அவரிடமிருந்து பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் சமீபத்தில் தெரிவித்த கருத்து விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அவர் அளித்த பேட்டியில், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை; அது பிச்சை என்று கூறியிருந்தார். 2014-ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும், அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி என்பது ஆங்கிலேயர் ஆட்சியின் தொடர்ச்சி என்று தெரிவித்திருந்தார். 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததை குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக அறியப்படுகிறது.

    இந்நிலையில், 1947-ல் இந்தியா பெற்றது பிச்சை என்ற அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்கும் வருண் காந்தி தனது கண்டன பதிவில், 'காந்தியை கொன்றவர்களை பாராட்டி, காந்தியை சிலநேரங்களில் அவமானப்படுத்துகிறார்கள். இப்போது, மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்தி போஸ் மற்றும் லட்சக்கணக்கான விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை கங்கனா அவமானப்படுத்தி உள்ளார். இதனை பைத்தியக்காரத்தனம் அல்லது தேச துரோகம் என்று அழைக்கலாமா?' என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் கங்கனாவுக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டு ம் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது-

    கங்கனாவின் கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பது பற்றி அவர் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், கங்கனா மீது சட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும். பத்ம விருது போன்ற உயர்ந்த விருதுகளை வழங்கும் முன்பாக, அதற்கு தகுதியானவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்றவர்கள் நாட்டையும், நாட்டின் ஹீரோக்களையும் அவமானப்படுத்துவதை தவிர்க்க முடியும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: