ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சமூக சேவகரான ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 141 பேருக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஆண்டு தோறும் 3 பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பத்ம விபூஷன் விருது விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவைக்கு அளிக்கப்படுகிறது. புகழ்பெற்ற சேவைக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டுக்கு 7 பேருக்கு பத்ம விபூஷனும் 16 பேருக்கு பத்ம பூஷனும் 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாரஜிற்கான பத்ம விபூஷன் விருதை, அவரது மகள் பன்சுரி சுவராஜ் பெற்றுக்கொண்டார்.
மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இறப்பிற்கு பிறகான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பின்னர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற, பி.வி.சிந்துவிற்கும் தமிழ் நாட்டை சேர்ந்த வர்த்தகர் வேணு ஸ்ரீனிவாசனுக்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் மற்றும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் ராமகிருஷ்ணன், மருத்துவர் ரவி கண்ணன், கலைத்துறையை சேர்ந்த கலி ஷபி மெஹபூப், ஷேக் மெஹபூப் சுபானி, லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், பிரதீப் தலபில் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார்.
புதுச்சேரியை சேர்ந்த டெரகோட்டா கலைஞர் முனுசாமிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் செவ்வாய்கிழமை வழங்கப்படுகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.