Home /News /national /

40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு... மத்திய அரசு கொள்கைகளை மாற்றி அமைக்க ப.சிதம்பரம் கோரிக்கை

40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு... மத்திய அரசு கொள்கைகளை மாற்றி அமைக்க ப.சிதம்பரம் கோரிக்கை

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார சரிவை நாடு சந்தித்திருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பெருளாதார சரிவு பற்றி கூறுகையில், கடந்த 4 காலாண்டு பொருளாதார செயல்திறனை பார்க்கிறபோது, 2020-21, 40 ஆண்டுகால பொருளாதாரத்தில் மிக இருண்ட ஆண்டாகும். அதே போன்று 2021-22 நிதி ஆண்டும் போய்விடக்கூடாது.

  மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும்.

  தற்போதையை பொருளாதார நிலைக்கு காரணம், கொரோனா பெருந்தொற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அதனுடன் பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் திறமையின்மையும், திறமையற்ற பொருளாதார நிர்வாகமும் சேர்ந்துள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் நல்ல யோசனைகள் இதுவரை மறுக்கப்பட்டுள்ளன.

  உலகளவிலான அனுபவங்கள் கண்டு கொள்ளப்படவில்லை. நிதி விரிவாக்கம், பணப் பரிமாற்றம் தொடர்பான யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுய சார்பு (ஆத்மநிர்பார்) போன்ற வெற்றுப் பொதிகள் தட்டையாகி விட்டன.

  நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பணத்தை அச்சிடவும், செலவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் நிதியமைச்சர் இப்போதும் தனது தவறானதும், பேரழிவை ஏற்படுத்தத்தக்கதுமான கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் நீண்ட பேட்டிகளை அளித்துள்ளார். ஆனால், அரசு செலவினம் அதிகரிப்பதும், ஏழைகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்வதும், ரேஷனில் தாராளமாக வினியோகம் செய்வதும் பொருளாதாரத்துக்கு தேவையானது ஆகும்.

  எங்களின் வேண்டுகோள்கள் அவர்கள் காதுகளில் விழவில்லை. இதனால் பொருளாதாரம் 7.3 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு சலுகைகள் வழங்குவது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் அலட்சியமாக, அவமதிப்பாக நடத்தப்படுவதாக கருதுகிறேன்.

  Must Read : ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க... உங்கள் கையில்தான் இருக்கு மக்களே : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  வேலையில்லா திண்டாட்டம் 11 சதவீதத்தை தாண்டி விட்டது. தொழிலாளர்கள் சக்தி பங்கேற்பு குறைகிறது. ஏராளமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதெல்லாம் பொருளாதாரம், மிக மோசமான நிலையில் இருப்பதையே காட்டுகின்றன. இவை ஏழை மக்களின் ஆழ்ந்த துயரத்தை சுட்டிக்காட்டுகின்றன” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Financial crisis, Indian economy, P.chidambaram

  அடுத்த செய்தி