2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் UDAN பிராந்திய இணைப்புத் திட்டத்தின் பலனை ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பெற்றுள்ளனர் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு), சமீபத்தில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து உள்ளார்.
சிறிய நகரங்களில் கூட விமான நிலையங்களை ஏற்படுத்தி அங்குள்ள மக்களை விமானங்களைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே UDAN திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காகச் சிறு சிறு விமான நிலையங்களில் விமானங்களை இயக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சேவை சரிவர செய்யப்படாத மற்றும் சேவை குறைவான விமான நிலையங்களுக்கிடையில் இணைப்பு மேம்படுவதால் விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி UDAN (Ude Desh ka Aam Nagrik) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் உள்ள சேவையற்ற மற்றும் குறைவான விமான நிலையங்களில் இருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயண வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
இதுவரை, நாடு முழுவதும் 425 UDAN வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இரண்டு நீர் விமான நிலையங்கள் மற்றும் எட்டு ஹெலிபோர்ட்கள் உட்பட 68 UDAN விமான நிலையங்களை இத்திட்டம் இணைக்கிறது.
ALSO READ | இன்னும் ஒராண்டிற்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.. Work From Homeக்கான புதிய விதிகளை வெளியிட்ட வர்த்தக அமைச்சகம்!
அமைச்சர் அளித்த பதிலின்படி, மாநில அரசுகள், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ), சிவில் enclaves, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (சிபிஎஸ்இ) ஆகியவற்றின் சேவையில்லாத மற்றும் குறைவான விமான நிலையங்களின் புத்துயிர் மற்றும் மேம்பாட்டிற்காக மொத்தம் 4,500 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்தது.
இந்த திட்டம் 4 கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 98 விமான நிலையங்கள், 33 ஹெலிபோர்ட்கள், 12 ஏரோ டிரம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 11 விமான நிறுவனங்கள் 350 ரூட்களில் இந்த திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க முன்வந்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் ஜூன் 30, 2022 வரை செய்யப்பட்ட செலவு ரூ.2,610 கோடி.
கடந்த 5 ஆண்டுகளில் லட்சத்திற்கும் அதிகமான முறை இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் பறந்து வருகின்றன. இதற்காக ஆண்டிற்கு மத்திய அரசு ரூ.1228 கோடியை ஒதுக்குகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் டிக்கெட்களை பெற முடியும். இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்து பயனடைந்துள்ளனர்.
UDAN திட்டத்தைப் பெற்ற விமானப் பயணிகளின் ஆண்டு வாரியான விவரங்கள்:
* 2017-18: 2,63,166
* 2018-19: 12,40,896
* 2019-20: 29,91,337
* 2020-21: 14,98,066
* 2021-22: 32,99,860
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.