இந்தியாவில் அதிகரிக்கும் ’Telegram’ யூசர்கள்.. உலகளவில் 63 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம்..

டெலிகிராம் செயலி

63 மில்லியன் மக்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 24% பேர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபலமான மெசேஜிங் ஆப்பான Telegram கடந்த மாதம் ஜனவரி 2021-ல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு அல்லாத செயலியாக மாறியது என்று சமீபத்தில் வெளியான சென்சார் டவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மெசேஜிங் செயலியை சுமார் 63 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டு ஜனவரியில் அதன் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 3.8 மடங்கு அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்சார் டவர் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவில் தான் "Telegram" செயலி அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

63 மில்லியன் மக்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 24% பேர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், அதன் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைகளால் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டதை அடுத்து, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக பாதுகாப்பான செயலியை கண்டுபிடிப்பதற்காக டெலிகிராம் செயலியை உபயோகப்படுத்தத் தொடங்கினர். இந்தியாவுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் அதிகபடியான மக்கள் Telegram செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

மொத்தம் 63 மில்லியன் பதிவிறக்கங்களில் 10 சதவிகிதம் இந்தோனேசியாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தரவுகள் அனைத்தும் சென்சார் டவர்ஸின் ஸ்டோர் இன்டெலிஜென்ஸ் தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. டெலிகிராமிற்குப் பிறகு, டிக்டாக் கடந்த மாதம் உலகில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு அல்லாத செயலியாக இருக்கிறது. ஜனவரி 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சீனாவில் மட்டும் 17 சதவீத மக்கள் டிக்டாக்கை பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே சீனா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து 10 சதவிகித பதிவிறக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்சார் டவரின் ஸ்டோர் இன்டெலிஜென்ஸ் அதன் இயங்குதளத்தில் வரலாற்று செயல்திறன் அளவீடுகளுக்கு மேலதிகமாக இருக்கும் ஆப்களின் பயன்பாட்டு பதிவிறக்க மதிப்பீடுகளைக் காண யூசர்களை அனுமதிக்கிறது. இதில், ஜனவரி 1, 2021 முதல் ஜனவரி 31, 2021 வரை உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோருக்கான பதிவிறக்க மதிப்பீடுகள் அடங்கும்.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்-அப் தனது புதுப்பிக்கப்பட்ட தரவு பகிர்வு கொள்கையை பேஸ்புக்கோடு அறிவித்த பின்னர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள யூசர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பயன்பாடுகளுக்கு மாறியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் பிசினஸ் சாட்கள், மற்றும் பல தரவுகள்  சில சந்தர்ப்பங்களில், பேஸ்புக்குடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் பகிரப்படலாம் என்று அறிவித்தது. அதோடு யூசரின் மொபைல் பேட்டரி சதவீதம், கடைசியாகப் பார்த்த செயல்பாடு போன்ற சில மெட்டாடேட்டாவை பேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published: