• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கொரோனாவுக்கு 41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு... 149 பேர் அச்சத்தில் தற்கொலை

கேரளாவில் கொரோனாவுக்கு 41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு... 149 பேர் அச்சத்தில் தற்கொலை

veena

veena

கொரோனா பாதித்த 149 பேர் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்

  • Share this:
கேரளாவின் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சில புள்ளிவிவரங்களை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 27, 2020ம் ஆண்டு இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. 20 வயதாகும் அந்த மாணவி சீனாவில் இருந்து திரும்பியவர். அதன் பின்னர் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாக பரவி பல கோடி பேரை பாதித்து, சில லட்சம் பேரை காவு வாங்கியிருக்கிறது.

முதல் பாதிப்பு கேரளாவாவில் கண்டறியப்பட்ட போதிலும், அந்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு, உயிர்பலி அதிகமாக இருந்த போதிலும் கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதற்காக பல தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா சூழல் தலைகீழ் ஆக மாறியுள்ளது. இந்தியாவிலேயே தினசரி பாதிப்பு, உயிர் பலியில் தற்போதும் முதல் இடம் கேரளாவுக்கு தான்.

இந்நிலையில் கேரளாவின் கொரோனா பரவல் குறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பல்வேறு தரவுகளை பதிலாக தந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.வினோத் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்த போது, “கேரளாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 41 கர்ப்பிணிகள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 149 பேர் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, வீணா ஜார்ஜ் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர் நடத்திய சீரோ சர்வேக்கும் (sero survey) மாநில அரசு நடத்திய சர்வேக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது என்றார். சீரோ சர்வே என்பது ஒரு லட்சம் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் உள்ளது என்பதை காட்டுவதாகும்.

ஐ.சி.எம்.ஆர் சர்வேயின்படி கேரளாவில் கடந்த மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீரோ பாசிட்டிவிட்டி ரேட் ஆனது 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் இந்த சர்வேயை மாநில அரசு நடத்திய போது சீரோ பாசிட்டிவிட்டி ரேட் ஆனது 82.61% ஆக இருந்தது என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சீரோ பாசிட்டிவிட்டியில் இந்த அதிகரிப்பு என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பலனாக இது உள்ளது. மக்கள் தொகையில் பெரும் பங்கினருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளது. ஆனாலும் மாநில மக்கள் தொகையில் இன்னும் 17% பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில் தான் இருக்கிறார்கள் எனவும், அதிகளவில் நோய் எதிர்ப்பு திறன் என்பது கடலோரங்களில் வசிப்பவர்களிடையே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: