எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் பலி: அண்டை மாவட்டங்களில் நில அதிர்வு!

எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் பலி: அண்டை மாவட்டங்களில் நில அதிர்வு!

வெடி விபத்து நடந்த கல் குவாரி

வெடி விபத்து நடந்த சிவமோகா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊர் ஆகும்.

  • Share this:
கர்நாடகா மாநிலம், மாலைநாடு பகுதியில் சிவமோகா அருகே லாரியில் ஏற்றிச் சென்ற வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் வட மாநிலத் தொழிலாளர்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிவமோகா தாலுகா அப்பலகெரே அருகே உள்ளது ஹுனசூரு கிராமம். இந்த கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி உள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு 50 க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி ரயில்வே கிரசர் அருகே சென்ற போது சுமார் 10.30 மணியளவில். திடீரென வெடித்துச் சிதறியது.

லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். ஓட்டுனர் உள்பட 15 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவமோகா புறநகர் காவல்துறையினர். அங்கு ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றினர். உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. விபத்துக்கு உள்ளான பகுதியல் புகை மூட்டம் அதிகமாக இருந்ததாகவும், இந்த விபத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. விபத்து நடந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சிவமோகாவில் உள்ள கல் குவாரி


இதனிடையே வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அண்டை மாவட்டங்களான சிக்மகளூர் மற்றும் உத்தர கன்னடாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்டதாக அஞ்சிய பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்து தஞ்சமடைந்தனர்.

மேலும் படிக்க.... சசிகலாவிற்கு கடுமையான நுரையீரல் தொற்று: மருத்துவ அறிக்கை வெளியீடு

முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊர்:

வெடி விபத்து ஏற்பட்ட சிவமோகா பகுதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊர் ஆகும். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான மீட்புப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, நேற்றிரவு முதலே அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:“சிவமோகாவில் ஏற்பட்ட துயரத்தால் வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Published by:Arun
First published: