மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடத்தி வருகிறது. 2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக முதலமைச்சரான மம்தா, அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கடுமையான சவாலையும் மீறி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்ற மம்தா ஆட்சியை தக்க வைத்த நிலையில், அவரை 2024ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிராக களம் காண வைக்க மூன்றாம் அணி கட்சிகள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றன.
திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் தனது கட்சியை விரிவுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட மம்தா, நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தலைமையில் எதிர்க்கட்சிகளை திரட்டி பொது வேட்பாளரை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கூட ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் என மம்தா அறிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளை கண்டித்து கொல்கத்தாவில் மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் மம்தா பேசுகையில் கூறியதாவது, "2024 ஆம் ஆண்டில் மத்தியில் இருந்து பாஜகவை அகற்றும் போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்னின்று நடத்த வேண்டும். அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தால் பாஜகவுக்கு தக்க பதிலடி தரப்படும். யாராக இருந்தாலும் ஒரு நாள் தோல்வியை காண வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பின்னர் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க: மோடியை முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்.. மனிதாபிமானம் மிக்கவர்..! - குலாம் நபி ஆசாத் புகழாரம்
பாஜகவிடம் தற்போது 300 எம்பிக்கள் இருக்கலாம். ஆனால், பிகார் மாநிலம் அவர்களை விட்டு சென்றுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலும் மாற்றம் நடைபெறும். இப்போது பாஜகவில் இருக்கும் தலைவர்கள் தேர்தலுக்குப் பின் இருக்க மாட்டார்கள்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Mamata banerjee, TMC