நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர
மோடி கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது, நாட்டு மக்களுக்கு உலக சுகாதார தின வாழ்த்துக்கள். அனைவரும் நல்ல ஆராக்கியத்துடன் இருக்க கடவுள் ஆசிர்வதிக் கட்டும். சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் இன்று நன்றி தெரிவிக்கும் நாளாகும். அவர்களின் கடின உழைப்பே, நமது பூமியை பாதுகாக்கிறது.
இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது. நமது குடிமக்களுக்கு நல்ல தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதிகளை உறுதி செய்வதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், நமது நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
இதையும் படிங்க - எழுவர் விடுதலை: ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தகவல்
பிரதம மந்திரி ஜன் அவுஷதி யோஜனா போன்ற திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடும்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் குறைந்த செலவில் மருத்துவ சேவை பெற அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இது, ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களிடம் குறிப்பிடத்தக்க சேமிப்பை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நமது ஆயுஷ் வலைப்பின்னலை நாம் பலப்படுத்தி வருகிறோம்.
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உள்ளூர் மொழியில் மருத்துவம் படிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது எண்ணற்ற இளைஞர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.