2024 தேர்தல் தான் இலக்கு: செப்டம்பர் 20-30 வரை நாடு தழுவிய போராட்டம் - எதிர்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

எதிர்கட்சிகள் கூட்டம்

மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை தொடர் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  மத்தியில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மிகவும் வலுவாக இருந்துவருகிறது. எனவே, மத்திய அரசை 2024-ம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் தங்களைத் தயார்படுத்திவருகின்றன. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அவர், தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 19 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

  இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘பா.ஜ.கவுக்கு எதிராக நாடாளுமன்றம் மற்றும் வெளியில் ஒன்றிணைந்து போராட வேண்டும். நமது இலக்கு 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான். யார் தலைமையேற்கிறார் என்பது பிரச்னையல்ல’ என்று தெரிவித்தார்.

  இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 19 கட்சிகளின் சார்பாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  அந்த அறிக்கையில், ‘பெகாசஸ் உளவு விவகாரம், விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறும் விவகாரம், கொரோனா பெருந்தொற்று தவறான மேலாண்மை, வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசமறுக்கும் மத்திய அரசின் ஆணவப் போக்கைக் கண்டிக்கிறோம். இதுதவிர மக்களைப் பாதிக்கும் எல்லா விவகாரத்தையும் விவாதிக்க வேண்டுமென்றே ஆளும் கட்சி மறுக்கிறது.

  எதிர்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தை முறியடிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற பாதுகாவலர்களால் இதுவரையில் இல்லாத அளவுக்கு மோசமான முறையில் கையாளப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழாவில் மக்களைப் பாதிக்கும் எந்த விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசவில்லை. அந்தப் பேச்சு முழுவதும் ஆணவம் மிகுந்ததாகவும், வெற்று வாய்வார்த்தையாகவும், பொய்யாகவும் இருந்தது. தடுப்பூசி போடும் பணி மெதுவாக நடைபெறுவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி பற்றாக்குறை. கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பாக ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் மூன்றுவிதமான புள்ளி விவரங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  இந்தியப் பொருளாதாரத்தின் அழிவு கோடிக்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்துள்ளது. அது மக்களை வறுமையிலும், பட்டியினிலும் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம் ஒன்பது மாதங்களைக் கடந்து நடைபெற்றுவருகிறது. தலித்கள், பழக்குடியின மக்கள், பெண்கள் மீதான மிக அதிக அதிகரித்துள்ளது. வருமான வரி வரம்பில் வராத மக்களுக்கு மாதம் தோறும் 7,500 ரூபாய் உதவித் தொகை வழங்கவேண்டும் என்றும் தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய உணவு தானியங்கள் கொண்ட பையை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பெட்ரோல், டீசல் மீதான அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ள கலால் வரியை திரும்பப் பெறவும் அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை திட்டத்தின் பணி நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: