ஒரு தாய் மட்டும்தான் மகனின் காதைத் திருகி புத்தி சொல்ல முடியும்: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடியின் தாய்க்கு விவசாயி கண்ணீர்க் கடிதம்

ஒரு தாய் மட்டும்தான் மகனின் காதைத் திருகி புத்தி சொல்ல முடியும்: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடியின் தாய்க்கு விவசாயி கண்ணீர்க் கடிதம்

மோடி-ஹிராபென்

ஒருவர் பிரதமராக இருக்கலாம் ஆனால் தாய்க்கு மகன் தான், இந்த நாட்டில் தாயாரை தெய்வமாக வழிபடுகிறோம். அதனால் நீங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரினால் அவர் மறுக்க முடியாது.

 • Share this:
  வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தயவுகூர்ந்து தங்கள் மகனிடம் கூற வேண்டும் என பஞ்சாப் விவசாயி ஓருவர் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

  ஹர்பிரீத் சிங் என்ற இந்த பஞ்சாப் விவசாயி பிரதமர் மோடியின் தாய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

  கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, உணவளிக்கும் அன்னதாதாக்களான விவசாயிகள் டெல்லி சாலையில் கருப்புச் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரில் துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

  இந்தப் போராட்டத்தில் 90-95 வயதுடைய முதியோர்கள் உள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்ளனர். குளிரினால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சிலர் உயிரைவிடவும் நேரிடுகிறது. இது நம் அனைவரது கவலையுமாகும்.

  இந்த போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது. விவசாயிகள் இந்தச் சட்டங்களினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். அவர்களின் குழந்தைகள் பற்றிய கவலை அவர்களுக்குப் பெருகியுள்ளது. இதில் திருத்தங்களை நாங்கள் கோரவில்லை, சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

  ஒருவர் பிரதமராக இருக்கலாம் ஆனால் தாய்க்கு மகன் தான், இந்த நாட்டில் தாயாரை தெய்வமாக வழிபடுகிறோம். அதனால் நீங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரினால் அவர் மறுக்க முடியாது.

  உங்களால் இந்தச் சட்டங்கள் ரத்து ஆனால் நாடே உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும். ஒரு மகனின் காதைத்திருகி தாய் மட்டுமே அறிவுரை வழங்க முடியும். இந்தச்சட்டங்களை திரும்பப் பெற்றால் அது தேசத்தின் வெற்றி, இதனால் யாரும் தோற்கப்போவதில்லை.

  இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: