ஹைவேஸில் மாயமான லாரிகள்... கொடூரமாக கொல்லப்பட டிரைவர்கள். அடுக்கடுக்கான கொலைகள்- பிரபல தாதா உள்பட 12 பேருக்கு தூக்கு

மாதிரிப்படம்

வீரப்பன் லாரியில் இருந்து இரும்பு பொருட்கள் மாயமாகியிருந்ததால் இரும்பு வியாபாரம் செய்வர்கள் மீது போலீஸாரின் பார்வை விழுந்தது.

 • Share this:
  2008-ம் ஆண்டு சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சரக்கு லாரிகள் அடிக்கடி மாயமாகின. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை கடந்து செல்லும் வாகனங்கள் மாயமாவது தொடர்கதையானது. லாரியின் ஓட்டுநர்கள், க்ளீனர்கள் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. அதுவும் வெளிமாநில சரக்கு வாகனங்களாக தொடர்ந்து மாயமானது. தமிழகத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான வீரப்பன் குப்புசாமி என்பவர் தனது லாரியுடன், ஓட்டுநர், க்ளீனர் இருவரும் மாயமானதாக ஓங்கால் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.வீரப்பன் குப்புசாமிக்கு சொந்தமான லாரியில் ராமசேகர் என்பவர் ஓட்டுநராகவும், க்ளீனராக பெருமாள் சுப்பிரமணி என்பவர் இருந்துள்ளார்.

  2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது லாரி 21டன் இரும்பு ஏற்றிக்கொண்டு கொல்கத்தா சென்றுள்ளது. ராமசேகர் தினமும் லாரி உரிமையாளரிடம் செல்போனில் வழக்கமாக பேசுபவர். ஓங்கால் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது இவர்கள் பேசியுள்ளனர். அதன்பின்னர் இருவரையும் தொடர்புகொள்ளமுடியவில்லை. வண்டியும் கொல்கத்தா சென்றடையவில்லை. இதனையடுத்து வீரப்பன் குப்புசாமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனிடையே லாரிகள் மாயமாவது தொடர்கதையானது.

  இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியது ஆந்திர காவல்துறை. அந்தப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வழியில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சுங்கச்சாவடிகள் வாகனம் குறித்து விசாரித்துள்ளனர். பெரும்பாலும் தமிழகம் மற்றும் வடநாட்டு வாகனங்களே காணாமல் போயிருந்தன. சுங்கச்சாவடியில் சேகரித்த ஆவணங்களே போலீஸாரின் விசாரணைக்கு உறுதுணையாக இருந்துள்ளது. வீரப்பன் லாரியில் இருந்து இரும்பு பொருட்கள் மாயமாகியிருந்ததால் இரும்பு வியாபாரம் செய்வர்கள் மீது போலீஸாரின் பார்வை விழுந்தது. அப்போதுதான் முன்னா பாயின் எனும் முகமது அப்துல் சமத் சிக்கினார். இவரது பட்டறையில் காணாமல் போன வாகனத்தின் பாகங்கள் இருந்துள்ளது, இருப்பினும் இந்த கும்பலை கைது செய்வது காவல்துறையினருக்கு மிகவும் சவாலானதாக இருந்துள்ளது.

  போலீஸார் நெருங்குவதை அறிந்த இந்த கும்பல் இருப்பிடத்தை மாற்றி வந்துள்ளது. சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களையும் மாற்றி வந்துள்ளனர். துப்பாக்கி முனையில் முன்னா பாய் மற்றும் அவனது கூட்டாளிகள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில் லாரிகளை மறிக்கும் இந்த கும்பல், ஓட்டுநர் மற்றும் கிளீனர்களை கொன்று தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வனப்பகுதிக்குள் உடல்களை புதைத்தாக கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

  தேசிய நெடுஞ்சாலையில் தனியாக வரும் சரக்கு லாரிகள்தான் இவர்களின் டார்கெட். காவல்துறை வேடம் அணிந்து லாரியை மறிப்பார்கள். ஆவணங்களை பறிசோதிப்பது போல் நடந்துக்கொள்ளும் இந்த கும்பல் டிரைவர்கள் மற்றும் க்ளீனர்கள் அசந்த நேரத்தில் அவர்களை கொலை செய்துவிட்டு லாரியையும் அதில் இருந்த பொருட்களையும் கடத்திக்கொண்டு பட்டறைக்கு கொண்டு செல்வது வழக்கம். செல்லும்வழியிலே கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எரித்துவிடுவார்களாம். பட்டறையில் தயாராகும் இருக்கும் மற்றொரு குழுவினர் லாரியையும் அதன் பாகங்களையும் தனியாக பிரித்து விடுவார்கள். வாகனத்தில் இருக்கும் சரக்குகளை விற்றுவிடுவார்களாம். இந்த கும்பல் சொன்ன இடத்துக்கு சென்று போலீஸார் பார்த்துள்ளனர். அங்கு கொலைசெய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்துள்ளது.

  இந்த வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக ஓங்கோல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் தொடர்புடைய முன்னா பாய் உட்பட 18 பேரும் குற்றவாளிகள் என உறுதியானது. கூடுதல் மாவட்ட 8-வது அமர்வு நீதிபதி ஜி.மனோகர்ரெட்டி இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் முன்னா பாய் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 6 பேருக்குஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்துகு அனுப்பி வைக்கப்பட்டு உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாட்டிலேயே ஒரே வழக்கில் 12 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.

   
  Published by:Ramprasath H
  First published: