வாந்தி, கை, கால் வலிப்பு.. ஆந்திராவில் தாக்கும் மர்மநோய்.. ஒருவர் உயிரிழப்பு.. பாதிக்கப்பட்ட 300 பேருக்கு தீவிர சிகிச்சை..

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்

ஆந்திராவில் பரவி வரும் அடையாளம் தெரியாத நோயால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 • Share this:
  ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியைச் சேர்ந்த சிலருக்கு கடந்த சனிக்கிழமையன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நடந்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தனர். வாந்தி, மயக்கம், வாயில் நுரை தள்ளுதல், வலிப்பு என பல்வேறு அறிகுறிகளுடன் பலர் பாதிக்கப்பட்டனர். பல பகுதிகளைச் சேர்ந்த 45 பேர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மக்கள் அச்சமடைந்தனர்.

  உடல்நலக்குறைவு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 292-ஆக உயர்ந்ததை அடுத்து மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினரும் எலுருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் என்ன நோய் பீடித்திருக்கிறது என கண்டறிய முடியவில்லை.

  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது நெகட்டிவ் என முடிவு வந்தது மருத்துவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

  இதையடுத்து துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ.கே.கே. ஸ்ரீநிவாஸ் எலுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரை சந்தித்தார். பொதுவாகவே எலுரு பகுதியில் வசிப்போருக்கு நீர் மாசுபாடு காரணமாக அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீர் மாசுபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

  காற்று மாசு காரணமாகவோ அல்லது பாலில் கலந்திருந்த நச்சு காரணமாகவோ இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புரியாத நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே நினைவில் இல்லை. இதனால் இது ஒரு புதிய வகையான வைரஸ் தொற்றாக கூட இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த பலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இது உளவியல் ரீதியான பாதிப்பான மாஸ் ஹிஸ்டீரியாவாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

  மேலும் படிக்க...Colleges Reopening | தமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..

  இந்நிலையில் விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து எலுரு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகளின் முதுகெலும்பிலிருந்து சேகரிக்கப்பட்ட திரவ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: