முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது தந்தையின் நினைவு குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் தனது ட்விட்டர் பதிவில், 'எனது தந்தை ராஜீவ் காந்தி நவீன இந்தியாவை உருவாக்கும் கொள்கைகளை வகுத்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் ஆவார்.பிறர் மீது அக்கறை கொண்ட, நற்பண்பாளரான எனது தந்தை, எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் பண்பையும் பிறர் மீது இரக்கம் கொள்ளும் குணத்தையும் போதித்துள்ளார். நான் அவரை இழந்து வாடும் இந்த வேளையில் அவருடன் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தை எண்ணி நினைத்து பார்க்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
1984 முதல் 1989 காலகட்டத்தில் இந்தியாவின் ஆறாவது பிரதமராக ராஜீவ் காந்தி இருந்துள்ளார். 1984ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தியின் மறைவை அடுத்து ராஜீவ் பிரதமராக பொறுப்பேற்றார்.பின்னர் விபி சிங் தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இவரது உடல் டெல்லி யமுனா நதிக்கரையில் உள்ள வீர் பூமி என்ற இடத்தில் எரியூட்டப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க:
கியான்வாபி மசூதி வழக்கை அனுபவம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீபெரும்புதூரிலும் ராஜீவ் காந்தி நினைவிடம் உள்ள நிலையில், ராஜீவ் நினைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.