• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • ’அவர் அதற்கு தான் தகுதியானவர் என மக்கள் கருதுகின்றனர்..’ பிரியங்காவை சாடிய யோகி ஆதித்யநாத்

’அவர் அதற்கு தான் தகுதியானவர் என மக்கள் கருதுகின்றனர்..’ பிரியங்காவை சாடிய யோகி ஆதித்யநாத்

அவர் அதற்கு தான் தகுதியானவர் என மக்கள் கருதுகின்றனர்: பிரியங்காவை சாடிய யோகி ஆதித்யநாத்

அவர் அதற்கு தான் தகுதியானவர் என மக்கள் கருதுகின்றனர்: பிரியங்காவை சாடிய யோகி ஆதித்யநாத்

அவர் அதற்கு தான் தகுதியானவராக மக்கள் கருதுகின்றனர் என பிரியங்கா காந்தியை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

 • Share this:
  உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

  இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

  யோகி ஆதித்யநாத்


  தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதனிடையே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் சீதாபூரில் தடுப்பு காவலில் வைத்தனர். அங்கு பிரியங்கா காந்தி தங்க வைக்கப்பட்ட விருந்தினர் மாளிகையை சுத்தம் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய உத்தர பிரதசே முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்கிம்பூர் சம்பவம் துரதிர்ஷடவசமானதும், வருந்தத்தக்கதும் ஆகும். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். யாராக இருந்தாலும் சரி, வன்முறைக்கும் இடமில்லை, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவும் இடமில்லை. உச்ச நீதிமன்ற விதிமுறையின் படி, யாரையும் கைது செய்வதற்கு முன் ஆதாரம் இருக்க வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.

  லக்கிம்பூர் சம்பவத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை. புகார்களின் படி, முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த வன்முறையின் பின்னணியில் எதிர்கட்சியில் உள்ள சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் அமைதியை நிலைநாட்டுவதற்காக அங்கு செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

  தொடர்ந்து, அவரிடம் பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் அறையை சுத்தம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதற்கு தான் தகுதியானவராக மக்கள் கருதுகின்றனர் என்று சாடினார்.

  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது குறித்து முதல்வரிடம் கேட்டபோது, "அவர்களால், தங்கள் சொந்த மாநிலங்களை கையாள முடியவில்லை. ஆனால் லக்கிம்பூர் பிரச்சினை குறித்து வருந்துகிறார்கள். பஞ்சாப் முதல்வரால் அவரின் சொந்த டிஜிபியை கூட முடிவு செய்ய முடியவில்லை. இது வெட்கக்கேடானது. அவர்கள் தங்கள் பலவீனங்களை மறைக்க விரும்புகிறார்கள்.

  தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் ’அரசியல் சுற்றுப்பயணம்’ மேற்கொள்ளுவதாக எதிர்க்கட்சி தலைவர்களை முதல்வர் கடுமையாக சாடினார். எதிர்மறை எண்ணத்தை பரப்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லை. கொரோனா தொற்றுநோய் தீவிரமடையும் போது அவர்கள் இல்லை. அவர்கள் லக்கிம்பூரில் ஒற்றுமையின்மையை உருவாக்க விரும்புகின்றர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: