சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சனம் செய்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்தின் பெயரை குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து பதிவிட்ட ட்வீட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர்
சித்தார்த். அண்மையில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்காக பஞ்சாப் அரசை விமர்சித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவாலும் பஞ்சாப் அரசை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சாய்னாவின் அந்த பதிவை ரீட்வீட் செய்த
நடிகர் சித்தார்த், சாய்னாவை விமர்சித்து ஆபாச அர்த்தம் தொனிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் காரணமாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசியல், சினிமா, தொழில் துறையினர், பெண்ணியவாதிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் சித்தார்த்தை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Also read:
சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!
இதனிடையே மத்திய சட்ட அமைச்சரும், முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான கிரண் ரிஜுஜூ,
சித்தார்த் விவகாரத்தில், அவரின் பெயரை குறிப்பிடாமல் காட்டமான கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்தியாவை ஒரு விளையாட்டு சக்தியாக மாற்றுவதில் அவரது சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்தியா சாய்னாவால் பெருமை கொள்கிறது. அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் தவிர உறுதியான தேசபக்தர். அத்தகைய ஒரு ஆளுமை மீது மலிவான கருத்தைச் சொல்வது ஒரு நபரின் இழிவான மனநிலையை காட்டுகிறது” என கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
சாய்னா நேவால் மீதான நடிகர் சித்தார்த்தின் டிவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது ட்வீட்டில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். எப்போது நீங்கள் தான் எனது சாம்பியன்” இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.