கொரோனா பாதிப்பு 2020-ல் ஏற்பட்டபோது, பொது முடக்கம், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கிப் போனது. தற்போது கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கணிசமாக குறைந்து இருக்கும் நிலையில், சுற்றுலாத்துறையும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி, சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந்த சூழலில் கடந்த 3 நாட்களில் மட்டும் வெளிநாடு செல்வதற்கான டிக்கெட்டுகள், குறைந்தது 20 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் அதையொட்டி வரும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக, மற்ற மாதங்களைவிட டிசம்பர் இறுதியில், விமான டிக்கெட்டுகளின் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது வந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சுற்றுலாத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
வரும் நாட்களில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக தொடங்கினால், சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை இன்னும் இழப்புகளை சந்திக்க நேரிடும். இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குள் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிக பரவல் தன்மையையும், 30-க்கும் மேற்பட்ட திரிபுகளையும் கொண்ட ஒமைக்ரான், தற்போது வரை 24 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்காவில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தென் ஆப்ரிக்காவிற்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இதனால் உலக அளவில் மீண்டும் பொருளாதார சுணக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.