மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனம், பற்றி எரிந்த வீடியோ வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் சார்பில் அண்மையில் இரண்டு எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வருவதற்கு முன்பே வாடிக்கையாளர்களால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் அதற்கான புக்கிங்குகள் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது.
Must Read : எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது தீ விபத்து - வேலூரில் தந்தை, மகள் உயிரிழப்பு
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கடையின் முன்பாக சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனத்தின், பேட்டரி தீடிரென வெடித்து கரும்புகை வெளியேற தொடங்கியுள்ளது. அடுத்த சிறிது நேரத்திலேயே வாகனத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெடித்து, தீப்பற்றிய இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 'தங்களது ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், காரணங்களை விரைவில் வெளியிடுவோம்' என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வேலூரில் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் தந்தையும், மகளும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து, எலக்ட்ரிக் பைக்குகள் இதுபோல் தீ விபத்துக்கு உள்ளாவதால், எலக்ட்ரிக் பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.