HOME»NEWS»NATIONAL»offerings prasatham sale by post in sabarimala ayyappa devotees welcome vai
சபரிமலையில் தபால் மூலம் பிரசாதம் விற்பனை, ஐயப்ப பக்தர்கள் பெரும் வரவேற்பு (வீடியோ)
கொரோன தடுப்பு நடவடிக்கை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்த திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தபால் மூலம் பிரசாத விற்பனையைத் தொடங்கியுள்ளது. இது ஐயப்ப பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில், பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த முறை கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 41 நாட்கள் மண்டல காலத்தில் வார நாட்களில் தினசரி ஆயிரம் பக்தர்களும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு அன்று 2 ஆயிரம் பக்தர்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல லட்சம் பக்தர்கள் வரும் இந்த சீசனில், சில ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலையை நிர்வகிக்க முடியாமல் வருமானம் இழந்து நிர்வாக செலவுக்காக கேரளா அரசிடம் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் சுமார் 160 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிய சபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு, இந்த ஆண்டு வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.
இதனால், வருமான இழப்பை சரி செய்ய சபரிமலை வர முடியாத பக்தர்களுக்கு தபால் மூலம் பணம்செலுத்தி ஐயப்பனின் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டது.
அதன்படி அரவணை, விபூதி, அப்பம், அபிஷேகம் செய்த நெய், அர்ச்சனை பிரசாதம், குங்குமம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பிரசாதம் அடங்கிய தொகுப்பு ஒன்று 450 ரூபாய் க்கு தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வகையில் நடந்து முடிந்த 41 நாட்கள் மண்டல காலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வரை தேவஸ்வம்போர்டு வருமானம் ஈட்டியுள்ளது.
கொரோன காலத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் வர முடியாதவர்களுக்கு இந்த திட்டம் உண்மையிலேயே வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக பக்தர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.