முகப்பு /செய்தி /இந்தியா / 20 முறை தனிவிமானத்தில் குடும்பத்துடன் பயணம்: உயர்ரக கார்கள்: கோடிக்கணக்கில் பணம் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இந்திய வனத்துறை அதிகாரி

20 முறை தனிவிமானத்தில் குடும்பத்துடன் பயணம்: உயர்ரக கார்கள்: கோடிக்கணக்கில் பணம் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இந்திய வனத்துறை அதிகாரி

அபய் காந்த் பதக்

அபய் காந்த் பதக்

ஒடிசாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி அபய் காந்த் பதாக் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :

ஒடிசாவில் பணி செய்து வருபவர் இந்திய வனத்துறை அதிகாரி அபய் காந்த் பதாக். அவர், 1987-ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வின் மூலம் இந்திய வனத்துறை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீப காலங்களில் அவர் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்வதை கவனித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், நேற்று 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அபய் காந்த்துக்கு சொந்தமான வீடு மற்றும் பிற இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஏராளமான பணம், நகை மற்றும் பிற சொத்துகள் இருந்தது தெரியவந்துள்ளது. புபனேஸ்வர், புனே, மும்பை, காகாரியா, உதய்பூர் ஆகிய இடங்களிலுள்ள அபய் காந்துக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

தனி விமானத்தில் குடும்பத்துடன் பயணிப்பதற்காக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊரடங்கு காலத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புனேவில் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பங்களா வீடுகளை மாத வாடகை 5 லட்ச ரூபாய்க்கு அவருடைய மகனின் பெயரில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரி தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்துள்ள செய்தியின்படி, ‘லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் மிகப்பெரிய மோசடி வழக்காக இதுதான் இருக்கும். இந்த வழக்கில் நாங்கள் இன்னும் இறுதி நிலையை எட்டவில்லையென்றாலும் மொத்த மதிப்பின் அளவு 20 கோடி ரூபாயைத் தாண்டும். அபய் காந்த் பதாக் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில வனத்துறையின் காடு வளர்ப்பு மற்றும் திட்டமிடுதலின் முதன்மை தலைமை பாதுகாவலராக(Principal Chief Conservator of Forests)2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அபய் காந்த் பதாக் இருந்துவருகிறார். 2019-ம் ஆண்டு காடு வளர்த்தல் திட்டத்துக்கா மத்திய அரசு 5,933 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தனி விமானத்தில் அபய் காந்த் பதாக் மேற்கொண்ட பயணம் குறித்து தெரிவித்த அதிகாரிகள், ‘மும்பை, புனே, டெல்லி, பாட்னா ஆகிய பகுதிகளுகு அபய் காந்த் அவருடைய குடும்த்துடன் சென்றுள்ளார். செப்டம்பர் 13-ம் தேதி அபய் காந்த் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் தனி விமானத்தில் புனேவுக்கு சென்றுள்ளார். அப்போதிலிருந்து அபய் காந்த் லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பின் கீழ் வந்தார். மாதம் 2.7 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் வனத்துறை அதிகாரியால் எப்படி இவ்வளவு பணம் செய்ய முடிகிறது. புபனேஷ்வரில் 8,000 சதுர அடி வீடும், இத்தாலி மார்பிள்ஸ், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பெட் கொண்ட வீட்டை எப்படி வைத்திருக்க முடிகிறது.

சோதனையின்போது, அவருடைய அண்ணன் மகளிடமிருந்து 50 லட்ச ரூபாயும், அவருடைய ஓட்டுநரிடமிருந்து 20 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அரைகிலோ தங்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் பணமும் அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. அபய் காந்தின் மகனின் வங்கிக் கணக்கில் 9.4 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. புபனேஷ்வரில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் 8.4 கோடி ரூபாய் உள்ளது.

மெர்சடிஸ், பி.எம்.டபிள்யூ, டாடா ஹாரியெர் ஆகிய விலை உயர்ந்த கார்கள் அவருடைய மகனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுஉள்ளன’ என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரி கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படுவது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vigilance officers